'சந்தேஷ்காளி மக்களை கவனிக்கவில்லை என்பதா?' திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் ஆவேசம்


சந்தேஷ்காளி மக்களை கவனிக்கவில்லை என்பதா? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் ஆவேசம்
x
தினத்தந்தி 25 Feb 2024 9:48 AM GMT (Updated: 25 Feb 2024 12:31 PM GMT)

சந்தேஷ்காளி மக்களின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக நுஸ்ரத் ஜஹான் எம்.பி. தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான், அப்பகுதி மக்களின் சொத்துக்களை மிரட்டி அபகரித்ததாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி சந்தேஷ்காளியில் பெண்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சி செய்வதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது. அதே சமயம், பாசிரத் தொகுதியின் எம்.பி.யும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான், தனது தொகுதிக்கு உட்பட்ட சந்தேஷ்காளி மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

அண்மையில் காதலர் தினத்தை முன்னிட்டு நுஸ்ரத் ஜஹான் எம்.பி., தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க. 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "அங்கே சந்தேஷ்காளி மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நுஸ்ரத் ஜஹான் எம்.பி. காதலர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டு விமர்சித்தது.

இந்நிலையில் நுஸ்ரத் ஜஹான் எம்.பி. தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு பத்திரிக்கை செய்தியை அவர் பகிர்ந்துள்ளார். அந்த செய்தியில், 'திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் எங்களை மறந்துவிட்டார்' என சந்தேஷ்காளி மக்கள் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் நுஸ்ரத் ஜஹான் எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"இது போன்ற குற்றச்சாட்டுகள் வருவது வேதனையளிக்கிறது. ஒரு பெண்ணாக, மக்கள் பிரதிநிதியாக நான் எப்போதும் எனது கட்சியின் வழிகாட்டுதலைப் பின்பற்றி மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். சந்தேஷ்காளி சம்பவத்தை பொறுத்தவரை, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்கனவே அங்கே உதவியை அனுப்பியுள்ளார். சந்தேஷ்காளி மக்களின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சட்டத்தை பின்பற்றி நிர்வாகத்தை நடத்துவதே நாம் செய்ய வேண்டிய பணியாகும். நான் என் தொகுதியில் உள்ள மக்களுக்கு உண்மையாக சேவை செய்துள்ளேன். அவர்களது மகிழ்ச்சியிலும், கஷ்டத்திலும் நான் உடன் இருந்திருக்கிறேன். எனது கட்சியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறேன்.

மேலும் மாநில அரசு மற்றும் நிர்வாகத்தின் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். தவறு எப்போதும் கண்டிக்கப்படும். நாம் ஒருவரையொருவர் குறைசொல்வதைத் தவிர்த்து, அமைதியை உருவாக்க ஒன்றுபட வேண்டுமே தவிர, கலவரத்தை உருவாக்குதற்கு அல்ல. மக்கள் பாதுகாப்பு மற்றும் நலனே எங்கள் முன்னுரிமை. யார் யாரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. மீண்டும் சொல்கிறேன், அரசியல் செய்வதை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.




Next Story