எந்த மாவட்டம் என்று தெரியாமல் குழப்பம்: செம்பரம்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


எந்த மாவட்டம் என்று தெரியாமல் குழப்பம்: செம்பரம்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x

எந்த மாவட்டம் என்று தெரியாத குழப்பத்தால் செம்பரம்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஊராட்சியில் பழஞ்சூர், பாப்பான் சத்திரம் கிராமங்கள் உள்ளது. செம்பரம்பாக்கம் பகுதி மட்டும் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வருவாய் கிராமத்திலும், பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்கள் காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கிராமத்திலும் உள்ளது. இதனால் இந்த 2 கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும் என்றால் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது.

மற்றபடி சட்டமன்றம், நாடாளுமன்றம், போலீஸ் நிலையம் அனைத்தும் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்தில் அடங்கியுள்ளது. இது குறித்து பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை பூந்தமல்லி தாலுகாவில் இணைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்த நிலையில் 6 மாத காலத்தில் 2 கிராமங்களையும் திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் இதுவரை அதிகாரிகள் அதனை செயல்படுத்தாமல் உள்ளனர்.

இதனை கண்டித்து செம்பரம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் 2 கிராமங்களையும் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகாவில் இணைக்கவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.


Next Story