தயார் நிலையில் ஜாம்புவானோடை கோரையாறு கதவணை


தயார் நிலையில் ஜாம்புவானோடை கோரையாறு கதவணை
x
தினத்தந்தி 23 Jun 2023 1:00 AM IST (Updated: 23 Jun 2023 5:18 PM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர் கடைமடையை நோக்கி பாய்ந்து வருகிறது.

திருவாரூர்

காவிரி நீர் கடைமடையை நோக்கி பாய்ந்து வருகிறது. இதனால் ஜாம்புவானோடை கோரையாறு கதவணை தயார் நிலையில் வைக்கப்பட்டு, பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

மேட்டூர் அணை திறப்பு

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்கு மேட்டூர் அணை நீர் ஆதாரமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைப்பது அவசியமாகிறது.

இதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக்கால்வாய் எனும் புத்தாறு ஆகிய ஆறுகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி திறந்து விடப்பட்டது.

கடைமடையை நோக்கி...

அங்கிருந்து காவிரி நீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்து, பின்னர் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பு கோரையாறு தலைப்பு அணை கடந்த 20-ந் தேதி திறக்கப்பட்டு கடைமடை பகுதிகளை நோக்கி காவிரி நீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை கோரையாற்றில் உள்ள கதவணை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பாசன வாய்க்கால்கள்

இந்த கதவணையில் 9 மதகுகள் புதிதாக மாற்றப்பட்டு வர்ணம் பூசப்பட்டு தயாராகிவிட்டது.

இங்கு தண்ணீர் வந்த பிறகு எக்ஸ் சர்வீஸ் மேன் காலனி பாசன வாய்க்கால், மொசவெளி பாசன வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடவும், இதன் மூலம் கடைமடைப் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் எடுத்து செல்லவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


Next Story