கடும் விலை வீழ்ச்சி: கோவையில் தக்காளிகளை சாலையோரம் கொட்டும் விவசாயிகள்


கடும் விலை வீழ்ச்சி: கோவையில் தக்காளிகளை சாலையோரம் கொட்டும் விவசாயிகள்
x

நாச்சிபாளையம் பகுதியில் தக்காளிகள் பெட்டி பெட்டியாக கீழே கொட்டப்பட்டு செல்வதால், விவசாயிகள் மட்டுமன்றி அப்பகுதி மக்களும் கவலையில் உள்ளனர்.

குனியமுத்தூர்,

மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையத்தில் காய்கறி கமிஷன் மண்டிகள் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

இந்த மார்க்கெட்டிற்கு நாச்சிபாளையத்தை சுற்றியுள்ள வழுக்குபாறை, வேலந்தாவளம், கண்ணமநாயக்கனூர், திருமலையம் பாளையம், பிச்சனூர், சொக்கனூர், அரிசிபாளையம், பாலத்துறை, மதுக்கரை போன்ற பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக தக்காளி அதிகளவில் வருகிறது. கடந்த சில தினங்களாக மார்க்கெட்டில் தக்காளியின் விலை கடுமையாக குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனைஅடைந்தனர்.

நேற்றும் விவசாயிகள் வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு தக்காளிகளை கொண்டு வந்தனர். கடந்த வாரம் ரூபாய் 20-க்கும் விற்கப்பட்ட தக்காளி நேற்று 16 கிலோ தக்காளி பெட்டி 60 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூ.4க்கும் குறைவாக விற்கப்பட்டது. விலை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் வேறு வழியின்றி தக்காளியை சாலையோரம் வீசி சென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இவ்வளவு குறைவான விலைக்கு தக்காளி விற்கும் போது, லோடுமேன் இறக்கு கூலி மற்றும் கமிஷன் ஆகியவை கொடுக்க முடியவில்லை. இந்த காரணத்தால் வேறு வழியின்றி கீழே கொட்டி விட்டு செல்கிறோம் என்றனர். நாச்சிபாளையம் பகுதியில் தக்காளிகள் பெட்டி பெட்டியாக கீழே கொட்டப்பட்டு செல்வதால், விவசாயிகள் மட்டுமன்றி அப்பகுதி மக்களும் கவலையில் உள்ளனர்.


Next Story