மதுபாட்டிலால் தாக்கப்பட்டார்: பேக்கரி கடை ஊழியர் படுகொலை - மெரினாவில் குதிரை ஓட்டுபவர் கைது
மதுபாட்டிலால் தாக்கி பேக்கரி கடை ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மெரினாவில் குதிரை ஓட்டுபவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 69). கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த இவர், திருவல்லிக்கேணியில் பேக்கரி கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
அதே பகுதியில் தங்கி இருந்தவர் மகேந்திரன் (30). இவர், மெரினாவில் குதிரை ஓட்டுபவர். சொந்த ஊர் விருத்தாசலம் அருகே உள்ள கோவியூர். மோகனும், மகேந்திரனும் நன்றாக பழகுவார்கள். இரவில் ஒன்றாக படுத்து தூங்குவார்கள்.
கடந்த 2-ந்தேதி இரவு மோகன் மது அருந்தி கொண்டிருந்தார். அதில் தனக்கும் வேண்டும் என்று மகேந்திரன் கேட்டார். அதற்கு மோகன், "எனக்கே மது போதாது, இதில் உனக்கும் தர முடியாது" என்று மறுத்து விட்டாராம். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.
அப்போது மோகன் வைத்திருந்த மது பாட்டிலை பறித்து, அவரை மகேந்திரன் தாக்கியதாக தெரிகிறது. இதில் மோகன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மோகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த மெரினா போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.