தொடர் விடுமுறை காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு-பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட கோரிக்கை
தொடர் விடுமுறை காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அதனால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
வால்பாறை
தொடர் விடுமுறை காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அதனால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
நீரார் அணை, கூழாங்கல் ஆறு
வால்பாறையில் டிசம்பர் மாதத்தில் நிலவும் குளிர்காலத்தை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குளிர் காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை, அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி விட்டனர். நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்து குவிந்தனர். வால்பாறையில் பகலில் கடுமையான வெயில் வாட்டிய போதும் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்று பகுதியில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
வால்பாறை பகுதியில் குளுகுளு சீசனும் தொடங்கி விட்டதால் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நீரார் அணை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டனர். மேலும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சுற்றுலா தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்றும், ஆறுகளில் இறங்கி குளிப்பவர்களையும், சுற்றுலா தலங்களில் அத்துமீறி நடப்பவர்களையும் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.