டீசல் விலை அதிகரிப்பால் காசிமேடு துறைமுகத்தில் 70 சதவீத படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை


டீசல் விலை அதிகரிப்பால் காசிமேடு துறைமுகத்தில் 70 சதவீத படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை
x

டீசல் விலை அதிகரிப்பால் காசிமேடு துறைமுகத்தில் 70 சதவீத படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார்கள்.

சென்னை

சென்னை காசிமேடு மீன் பிடித்துறை முகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக 30 சதவீத விசைப்படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றன. 70 சதவீத விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 15 முதல் 20 நாட்கள் வரை தங்கி மீன்பிடிப்பது வழக்கம். இதற்கு 6,500 முதல் 8,000 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ் கட்டிகள், மீனவர்கள் தங்கி மீன் பிடிப்பதற்கு தேவையான ரேஷன் பொருட்கள், குடிநீர் ஆகியவற்றை கணக்கிட்டால் ஒரு விசைப்படகு ஒருமுறை கடலுக்குள் சென்றுவர ரூ.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை தேவைப்படுகிறது.

தற்போது டீசல் விலை உயர்வு மற்றும் பல நேரங்களில் குறைந்த அளவு மீன்களே கிடைப்பதால் விசைப்படகு மீனவர்கள் பெரும் நஷ்டமடைந்து வருகிறார்கள். இந்த நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார்கள். எனவே மானிய விலை டீசலை கூடுதலாக வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது குறைந்த அளவு விசைப்படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு மீன்வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் மீன்களின் விலையும் 2 மடங்கு அதிகரித்து காணப்படுகிறது என விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story