மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்தது:ஆபத்தை உணராமல் ஆழியாறு அணையில் இறங்கும் சுற்றுலா பயணிகள்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்தது:ஆபத்தை உணராமல் ஆழியாறு அணையில் இறங்கும் சுற்றுலா பயணிகள்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மழை இல்லாததால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையில் அணைக்குள் அத்துமீறி இறங்கும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

மழை இல்லாததால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையில் அணைக்குள் அத்துமீறி இறங்கும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

ஆழியாறு அணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழை மூலம் நீர்வரத்து உள்ளது. அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்க்க கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் அணையில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

தற்போது மழை பொழிவு குறைந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்து உள்ளது. இதன் காரணமாக ஆழியாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்கி புகைப்படம் எடுப்பது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட கூடும். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து பாறைகள் வெளியே தெரிகின்றன. இந்த நிலையில் அணையை பார்த்து ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்குகின்றனர். அணையில் உள்ள ஆபத்தை அறியாமல் குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடன் அணைக்குள் இறங்கி ஆட்டம் போடுகின்றனர்.

இதற்கிடையில அணைக்குள் முதலை கிடப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அணையில் ஆழம், சேறு மற்றும் சுழல் இருப்பதால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அணைக்குள் விதிமுறையை மீறி இறங்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story