நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாகி விட்டது- திருச்சி சிவா எம்.பி.


நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாகி விட்டது- திருச்சி சிவா எம்.பி.
x
தினத்தந்தி 21 Aug 2023 12:30 AM IST (Updated: 21 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாகி விட்டது என மயிலாடுதுறையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

மயிலாடுதுறை

நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாகி விட்டது என மயிலாடுதுறையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

உண்ணாவிரதம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது என்கிற மருதவாணன் வரவேற்று பேசினார்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி

பிளஸ்-2 சிறப்பாக படித்து, இட ஒதுக்கீடு அடிப்படையில் டாக்டராகலாம் என்பதற்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி தான் இந்த நீட் தேர்வு. அரசு பள்ளிகளில் படித்துவரும் ஏழை மாணவர்கள் ரூ.15 லட்சம் செலவு செய்து நீட் பயிற்சி வகுப்புக்கு செல்வது என்பது இயலாது.

உயர்கல்வி படிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த நிறைய பேர் டாக்டர்களாகி உள்ளனர். அரபு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர். அந்த அளவுக்கு தரமான டாக்டர்கள் தமிழகத்தில் உருவாகி உள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் தற்போது ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாக ஆகிவிட்டது

சட்டசபையில் தீர்மானம்

பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார்கள். இந்த நிலையில் நன்றாக படித்த போதும் டாக்டராகும் ஆசை நிறைவேறாத போது மாணவர்கள் விரக்தி அடைந்து விடுகின்றனர்.

அதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கின்றோம். 2 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் அதை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை. மத்திய அரசும் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் கல்யாணம், குத்தாலம் அன்பழகன், அருள்செல்வன், சத்தியசீலன், விஜயபாலன், நகரசபை தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவி காமாட்சிமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story