ஒரே நாளில் ரூ.14 கோடி தங்கம் பறிமுதல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 20 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம்


ஒரே நாளில் ரூ.14 கோடி தங்கம் பறிமுதல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 20 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம்
x

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 113 பேரிடம் இருந்து ரூ.14 கோடி தங்கம், ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக 20 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடந்த 13-ந் தேதி ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 186 பயணிகளில் சுமார் 113 பேர் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 113 பயணிகளை வெளியில் செல்ல விடாமல் சுங்க இலாகா அலுவலகத்திற்குள் வைத்து சோதனைகள் நடத்தினர். அதில் பிடிபட்டவர்கள் தங்கம் கடத்தும் தொழிலில் ஈடுபடும் குருவிகள் என தெரியவந்தது. இவர்கள் 113 பேரிடம் இருந்து ரூ.14 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்கம், ஐபோன்கள் உள்பட மின்சாதன பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஓமனில் இருந்து ஒரே விமானத்தில் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா பிரிவில் பணியாற்றிய 4 சூப்பிரண்டுகள், 16 இன்ஸ்பெக்டர்கள் சென்னை சுங்க இலாகா தலைமை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்து விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் என சிலரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 20 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story