கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலி: பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு-எச்சங்கள் சேகரிப்பு

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக கோவையில் பன்றி பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் எச்சங்களை சேகரித்தனர்.
கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக கோவையில் பன்றி பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் எச்சங்களை சேகரித்தனர்.
ஆய்வு
கேரள மாநிலம் வயநாடு, கண்ணூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வகையான காய்ச்சல் பன்றிகளுக்கு வேகமாக பரவும் என்பதால் அங்குள்ள பண்ணைகளில் வளர்த்து வரும் ஏராளமான பன்றிகளை அழிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு பன்றிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் கேரள எல்லையில் இருப்பதால் இங்கும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், சூலூர், போளுவாம்பட்டி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் 19 பன்றிகள் பண்ணைகளில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
எச்சங்கள் சேகரிப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்றிகளின் கழிவுகள் மற்றும் எச்சங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பன்றிகளின் பண்ணைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், எக்காரணத்தைக்கொண்டும் வெளியாட்களை பண்ணைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளதுடன், ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து கோவை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது:-
ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பன்றிகளில் இருந்து பன்றிகளுக்கு மட்டுமே பரவும். மனிதர்களுக்கு பரவாது. இந்த காய்ச்சல் வந்த பன்றிகள் உயிரிழந்துவிடும். அதிக காய்ச்சல், கண்ணில் இருந்து ஒருவித கழிவு வெளியேறுவதால் கண்கள் மூடிவிடுதல், வாந்தி உள்ளிட்டவைதான் இதன் அறிகுறி ஆகும். ஒரு பன்றிக்கு இந்த காய்ச்சல் வந்துவிட்டால், உடனே அந்த பண்ணைகளில் உள்ள அனைத்து பன்றிகளுக்கும் மிக எளிதாக பரவி விடும்.
19 பண்ணைகள்
கோவை மாவட்டத்தில் உள்ள 19 பன்றிகள் பண்ணைகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. எனவேதான் இந்த பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்த வகையான காய்ச்சல் பரவல் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்றிகளின் எச்சங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த கால்நடை டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் அருகில் உள்ள பன்றிகளின் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






