முதல்-அமைச்சர் முயற்சியால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி - சபாநாயகர் அப்பாவு


முதல்-அமைச்சர் முயற்சியால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி - சபாநாயகர் அப்பாவு
x
தினத்தந்தி 12 Feb 2024 5:23 AM GMT (Updated: 12 Feb 2024 6:53 AM GMT)

கவர்னர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் வழக்கமாக சட்டசபை கூடும். ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் போன்ற காரணங்களால், சட்டசபை கூடுவது தள்ளிப்போனது. இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன்சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதனை தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார். தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என்று கூறி உரையை 2 நிமிடங்களில் கவர்னர் நிறைவு செய்தார்.

சட்டப்பேரவையில் கவர்னர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.அப்போது அவர் கூறியதாவது ,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம்.

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021- 22ல் 4ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2022 -23ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்வதற்கு நிறுவனங்களுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் விளைவாக பேருந்துகளில் பெண்கள் பயணிப்பது 40% இருந்து 65% ஆக உயர்ந்து பெண்கள் எளிதாக பயனம் செய்யவும் முன்னேறவும் வழி பிறந்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கோரிக்கையை ஏற்று சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தும் என நம்புகிறோம். தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது. என தெரிவித்தார்.


Next Story