திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து தாம்பரத்தில் 5-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து தாம்பரத்தில் 5-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து தாம்பரத்தில் 5-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

"மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு" என்றார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. மக்களுக்குத் தொண்டு செய்திட வேண்டும்; அனைத்து நிலைகளிலும் வாழ்வியலைத் தொடரும் மக்கள், எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு டாக்டர் எம்.ஜி.ஆரால் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" எனும் மாபெரும் பேரியக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும், ஜெயலலிதாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியிலும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து பல்வேறு முத்தான திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

திமுக ஆட்சியில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 5-க்கு உட்பட்ட இடங்களில், பின்வரும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த திமுக அரசும், தாம்பரம் மாநகராட்சியும் தவறியதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைவிடக் கொடுமை என்னவென்றால், இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுச் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மண்டலம் 5-ல் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. குடிநீர் இணைப்புக்கள் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அதிமுக ஆட்சியில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் லாரிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மின்சாரக் கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் முறையாக பராமரிக்காத காரணத்தால் அவை எரிவதில்லை. இதன் காரணமாக, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு திருட்டுகளும், விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

மாடம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் அறிவித்தும், இன்னும் பணிகள் துவக்கப்படவே இல்லை. சேலையூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் சரிவர முடிக்கப்படவில்லை. இதனால், சிறிய அளவு மழை பெய்தாலே மக்கள் சாலைகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.

இங்குள்ள அம்மா உணவகத்தில், கழக ஆட்சிக் காலத்தில் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் உணவருந்தி பயன்பெற்று வந்த நிலையில் தற்போது, தரமற்ற உணவு வகைகளை தயார் செய்வதால் மிகவும் குறைவான மக்களே உணவருந்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் -5ல் நிலவி வரும் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சனை, தெரு விளக்குகள் எரியாமை, பாதாள சாக்கடைத் திட்டம் சரிவர முடிக்காதது, குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்யாதது, ஏரிகளில் கழிவு நீர் கலப்பது முதலானவற்றை சரிசெய்யத் தவறிய திமுக அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும்; அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தைக் குறைத்து, இத்திட்டத்திற்கு மூடுவிழா காணத் துடிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், தாம்பரம் கிழக்கு, மாடம்பாக்கம் ஆகிய பகுதிக் கழகங்கள் ஒன்றிணைந்து, 5.10.2023 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், தாம்பரம் கிழக்கு, வால்மீகி தெரு-ஏரிக்கரை தெரு சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான T.K.M. சின்னையா; செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.

திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story