எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு...!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சென்னை,
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதமும் அளிக்கப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கான இருக்கையில் உட்கார்ந்திருந்தார். இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் ஓ.பன்னீர்செல்வம் அதே இருக்கையில் அமர்ந்தார். இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி கோஷம் எழுப்பினர்.
ஆனால் சட்டசபை விதிகளை கூறி சபாநாயகர் அங்கீகரிக்க மறுத்ததால், அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை கண்டித்து, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கட்சியின் அமைப்பு ரீதியான சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கோரி அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் மனு அளித்தனர்.
இந்நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் வள்ளுவர் கோட்டம் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.