அறப்போர் இயக்கம் மலிவான விளம்பரம் செய்வதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றச்சாட்டு


அறப்போர் இயக்கம் மலிவான விளம்பரம் செய்வதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றச்சாட்டு
x

அறப்போர் இயக்கம் மலிவான விளம்பரம் செய்வதாக சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

சென்னை,

நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு என அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞரை வாதிட உத்தரவிட்டார்.

இதனையடுத்து வாதிட்ட இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும் இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது எனவும் தெரிவித்தார். ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை எனவும் மேலும் டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை எனவும் வாதிட்டார்.

தம்முடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் குற்றம்சாட்டப்படுவதாகவும் கூறினார். தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் நேரடியாக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளை வைப்பதே தவறு எனவும் முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படை குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகவும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் சமூக வலைதளங்களில் ஒரு குற்றச்சாட்டை கூறும் முன் அதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நபர் குறித்து அவதூறு கருத்துகளை கூறிவிட்டு அதற்கு இழப்பீடு கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது எனவும் கூறினார்.

ஆதாரமில்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக கூறுவது மான நஷ்ட வழக்கு உட்பட்டது என்பதால் தம்மை குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்க் கொண்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 1 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story