நாமக்கல்லில் இருந்து வடமாநிலங்களுக்கு தினசரி 35 லட்சம் முட்டைகள் அனுப்பி வைப்பு


நாமக்கல்லில் இருந்து  வடமாநிலங்களுக்கு தினசரி 35 லட்சம் முட்டைகள் அனுப்பி வைப்பு
x

நாமக்கல்லில் இருந்து வடமாநிலங்களுக்கு தினசரி 35 லட்சம் முட்டைகள் அனுப்பி வைப்பு

நாமக்கல்

தமிழகத்தில் கொள்முதல் விலை குறைவாக இருப்பதால், நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி 35 லட்சம் முட்டைகள் வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்யும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். இந்த முட்டை கொள்முதல் விலையானது, தட்பவெப்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

முந்தைய காலத்தில் வாரத்தில் 3 நாட்கள் விலை நிர்ணயம் செய்து வந்த நிலையில், தற்போது மறுநாள் கொள்முதல் விலை முதல்நாள் மாலை 6.30 மணிக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 1-ந் தேதி 410 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை தற்போது படிப்படியாக ரூ.1 அதிகரித்து 510 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

35 லட்சம் முட்டை

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தாலும், நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு (நெஸ்பேக்) 30 காசுகள் குறைத்து விற்பனை செய்ய பரிந்துரைக்கிறது. அதன்படி ஒரு முட்டையை 480 காசுக்கே வியாபாரி கள் வாங்கி செல்கின்றனர்.

ஆனால் ஐதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை 500 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு, எவ்வித மைனசும் இன்றி, அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் விலை குறைவாக உள்ள தமிழக முட்டைக்கு அதிக அளவில் ஆர்டர் வழங்குகின்றனர். அதன்படி, தினசரி 10 லோடு என 35 லட்சம் முட்டைகள் இங்கிருந்து, மும்பை, கொல்கத்தா, உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வடமாநிலங்களில், கொள்முதல் விலையை உயர்த்தும்போது, தமிழகத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story