வயதான தம்பதி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டனர் - பிரேத பரிசோதனையில் தகவல்


வயதான தம்பதி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டனர் - பிரேத பரிசோதனையில் தகவல்
x

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பமாக வயதான தம்பதி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

சென்னை

குன்றத்தூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், ஈ.வி.பி.டவுன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 83). இவருடைய மனைவி ஜெய்பார்வதி (72). இவர்களுடைய மகன் சக்திவேல் (46). கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் வெளியே சென்று விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டுக்குள் அவருடைய பெற்றோர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குன்றத்தூர் போலீசார் வயதான தம்பதிகள் இருவரின் உடல்களை் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அவர்களுடைய மகன் சக்திவேலிடம் விசாரித்து வந்தனர்.

கணேசன் அரிசி ஆலை நடத்தி வந்தார். அவருடைய மகன் சக்திவேல், சொந்தமாக இயக்கி, தயாரித்த 3 திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் ஏராளமான பணம் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. சக்திவேலுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் முடிந்த சில நாட்களில் அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாகவும் தெரிகிறது.

தற்போது சக்திவேல் கட்டுமான தொழில் செய்து கொண்டு தனது பெற்றோரை கவனித்து வந்தார். அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்த போது சக்திவேல் தனது பெற்றோரை நல்ல முறையில் பார்த்து வந்ததாக தெரிவித்தனர்.

அவரது பெற்றோர் வயதானவர்கள் என்பதால் வெளி நபர்கள் யாரும் உள்ளே சென்று விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது வீட்டை பூட்டி சென்றதும் தெரியவந்தது. வயதான கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏதாவது நடந்ததா? என்ற கோணத்திலும் வயதான தம்பதி வீட்டில் இருப்பதை அறிந்து கொள்ளை அடிக்கலாம் என நினைத்து வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் தம்பதிகளை கொலை செய்துவிட்டு பொருட்களை எடுத்து சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரித்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இருவரின் இறப்புக்கான காரணம் என்ன? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தோம். முதல் கட்டமாக வயதான தம்பதிகள் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சு திணறி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகிேறாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story