ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நடுவே மாட்டிக்கொண்ட முதியவர்கள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்


ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நடுவே மாட்டிக்கொண்ட முதியவர்கள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்
x

காவிரி ஆற்றின் நடுவே கோவில் அமைத்து தங்கியிருந்த வயது முதிர்ந்த தம்பதியை தியணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால், வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிக்கிறது. இன்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 2 லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவிரி கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்லாத வகையில் காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி ஆற்றின் நடுவே உள்ள ஒரு சிறு தீவு போன்ற பகுதியில் சிறிய அளவிலான கோவில் ஒன்றை அமைத்து அங்கு 75 வயதான குருசாமி மற்றும் அவரது மனைவி 72 வயதான பங்காரு அம்மாள் ஆகிய இருவரும் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் உள்ளே இருப்பது குறித்து இன்று தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றின் நடுவே சிக்கியிருந்த தம்பதியை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இவர்களைப் போல வெள்ள அபாயம் உள்ள பிற பகுதிகளிலும் யாரேனும் தங்கி இருக்கிறார்களா என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story