'மக்கள் பிரதிநிதியாக ராகுல் காந்தி செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்' - முத்தரசன் வலியுறுத்தல்


மக்கள் பிரதிநிதியாக ராகுல் காந்தி செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
x

சூரத் கீழமை கோர்ட்டு ஏற்படுத்திய களங்கத்தை சுப்ரீம் கோர்ட்டு துடைத்து தூய்மைப்படுத்தியுள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராகுல் காந்தி மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து கூறிய கருத்தை, குஜராத் பா.ஜ.க.வினர், திரித்து, வழக்காக பதிவு செய்து சூரத் கீழமை கோர்ட்டில் வழக்கு விசாரணை நடத்தி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 15 ஆயிரம் அபதாரமும் விதிக்கும் உத்தரவு பெற்றனர். இந்த அநியாய உத்தரவு வழங்கிய நீதித்துறை நடுவருக்கு பதவி உயர்வு வழங்கி கொண்டாட முனைந்தது சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டால் தடுக்கப்பட்டது.

கீழமை கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, குஜராத் ஐகோர்ட்டில் செய்த மேல்முறையீடு கடந்த ஜூலை 7-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது என்ற கருத்து கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு நியாயம் கோரினார்.

அவரது முறையீட்டை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராகுல் காந்திக்கு விசாரணை கோர்ட்டு(சூரத் கீழமை கோர்ட்டு) கடந்த மார்ச் 23-ந்தேதி வழங்கிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ 15 ஆயிரம் அபதாரம் என்ற தண்டனைக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு தனி நபரின் உரிமைக்கு மட்டும் பாதகமாக அமையவில்லை. தொகுதி மக்களின் தேர்ந்தெடுக்கும் உரிமையினையும் பாதித்துள்ளது என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் சூரத் கீழமை கோர்ட்டு தனது அதிகார எல்லை தாண்டி, அதன் எதிர்விளைவுகள் குறித்து கருத்தில் கொள்ளாது, ஒரு சார்பு நிலையில் நின்று, யாருடைய விருப்பத்தையோ நிறைவேற்ற முனைந்துள்ளது. நீதிமன்ற வரலாற்றில் சூரத் கீழமை கோர்ட்டு ஏற்படுத்திய களங்கத்தை சுப்ரீம் கோர்ட்டு துடைத்து தூய்மைப்படுத்தியுள்ளது. . இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வரவேற்பதுடன் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையில், வயநாடு தொகுதி மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்."

இவ்வாறு முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story