உயர்மின் அழுத்த கம்பியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
ராமாபுரத்தில் உயர்மின் அழுத்த கம்பியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
எலக்ட்ரீசியன் சாவு
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பூத்தபேடு, காளப்பன் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 30). இன்னும் திருமணம் ஆகாத இவர், பெற்றோருடன் வசித்து வந்தார். தினேஷ், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தினேஷ், மதுபோதையில் வீட்டின் மொட்டை மாடியில் சென்று தூங்கச் சென்றார். நேற்று அதிகாலை மொட்டை மாடியின் தடுப்பு சுவரில் தினேஷ் குப்புற படுத்தபடியும், அவரது இடது கை அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியை தொட்டபடியும் பிணமாக கிடந்தார். அவர் மின்சாரம் தாக்கி பலியானது தெரிந்தது. இதனால் தினேஷின் பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸ் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்து வந்த ராமாபுரம் போலீசார், பலியான தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், குடிபோதையில் உயர்மின் அழுத்த கம்பியை தொட முயன்றதால் மின்சாரம் தாக்கி பலியானாரா? அல்லது தற்கொலை செய்வதற்காக மின்கம்பியை பிடித்தாரா? அல்லது போதையில் வாந்தி எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக உயர்மின் அழுத்த கம்பியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.