மின்சார கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கலாமே!


மின்சார கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கலாமே!
x

மின்சார கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கலாமே என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

அரியலூர்

தமிழ்நாட்டில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற வீதத்திலும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்திலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது.

அதன்படி 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.55 வரையும், 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.1,130 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.

தத்தளிக்கிறது

மின்சார வாரியம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 226 கோடி கடனில் தத்தளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டியது கட்டாயமாகிவிட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருந்தாலும் மின்கட்டண உயர்வு 'ஷாக்' தருவதாக உணர்ந்து இருக்கும் பொதுமக்கள், கட்டணம் வசூலிக்கும் முறையையாவது மாற்றி அமைக்கக்கூடாதா? என்ற மனநிலைக்கு வந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது. 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.225 வசூலிக்கப்படுகிறது. 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.1,125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாதந்தோறும்

2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏன் என்றால்? உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாதத்திற்கு 100 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்?

தற்போது அவர் ரூ.225 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது. மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் கட்டணம் செலுத்த தேவை இருக்காது. ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்கு மாதத்திற்கு 200 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள். தற்போது 400 யூனிட்டுக்கு அவர் ரூ.1,125 செலுத்த வேண்டும். மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் ரூ.225 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும். இதனால்தான் மாதந்தோறும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். இதுபற்றியும், மின்சார கட்டண உயர்வு பற்றியும் பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்து வருமாறு:-

ஏழை மக்கள் பாதிப்பு

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி மணிமாறன்:-

மின் கட்டண உயர்வால் மிகவும் பாதிக்கப்படுவது ஏழ்மையான நிலையில் உள்ள பாமர மக்கள்தான். வசதியானவர்களும் பயன்பெறும் அனேக இலவச திட்டங்கள் உள்ளன. அவற்றை நிறுத்தலாம். ஆனால் ஏழைகள் பாதிக்கப்படும் வகையில் உள்ள மின் கட்டண உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதே எனது கருத்து. நாங்கள் மின் சிக்கன நோக்கத்தில் வாட்டர் ஹீட்டர், மின் அடுப்புகள் போன்ற மின்சாரம் அதிகமாக செலவாகும் கருவிகளை பயன்படுத்துவதில்லை. அதற்கு மாற்றாக விறகு அடுப்புகளைத்தான் பயன்படுத்துகிறோம். மேலும் மின்சார கட்டண வசூலுக்கும் முறையை 2 மாதங்களுக்கு ஒரு முறை என்பதை மாற்றி, ஒவ்வொரு மாதமும் கணக்கீடு செய்து கட்டணம் வசூலித்தால் எங்களைப் போன்ற ஏழை மக்கள் அதிகமாக பயன்பெறுவார்கள்.

ஒவ்வொரு மாதமும் மின்அளவீடு

தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த வணிகர் ராஜேந்திரன்:- மின் கட்டண உயர்வு நடுத்தர, அடித்தட்டு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் அளவீடு செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டால் பாதி அளவுக்கு மின் கட்டணம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் அளவீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. அதனை அமல்படுத்தி நடுத்தர மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

கழுத்தை இறுக்குவதாக...

காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த குடும்பத்தலைவி வெண்ணிலா:- எதிர்க்கட்சியாக இருந்தபோது மின் கட்டண உயர்வை கண்டித்தவர்கள், இப்போது ஆளும் கட்சியாக வந்தபிறகு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. மின் கட்டண உயர்வு எங்கள் கழுத்தை இறுக்குவதாக அமைந்துள்ளது. எனவே மின் கட்டண உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும். அல்லது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் ஒவ்வொரு மாதமும் மின் அளவீடு செய்து கட்டணம் வசூல் செய்ய வேண்டும்.


Next Story