பொதட்டூர்பேட்டையில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி


பொதட்டூர்பேட்டையில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி
x

பொதட்டூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் புதியதாக வீட்டிற்கு மின் இணைப்பு பெற ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மேலும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர் பேட்டை அருகே கேசவராஜகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிரகாஷ். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கணபதி என்பவரிடம் தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டும் என்று கேட்டார். அதற்கு மின்வாரிய வணிக ஆய்வாளர் கணபதி தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வழங்கினால் மின் இணைப்பு தருவதாக தெரிவித்தார். அவருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆட்டோ டிரைவர் பிரகாஷ் இது குறித்து திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலை பொதட்டூர்பேட்டை மின்வாரிய அலுவலக பகுதியில் பதுங்கி இருந்தனர். முன்னதாக ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை பிரகாஷிடம் கொடுத்து அவற்றை மின்வாரிய வணிக ஆய்வாளர் கணபதியிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். அதேபோல் ஆட்டோ டிரைவர் பிரகாஷ் பொதட்டூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று வணிக ஆய்வாளர் கணபதியை சந்தித்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அவரிடம் கொடுத்தார்.

அப்போது பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணபதியை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரிடம் சோதனை நடத்தியதில் கூடுதலாக ரூ.25ஆயிரம் ரொக்க பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டிற்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரிய வணிக ஆய்வாளர் கணபதி ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story