திருச்சி மாநகரில் முதல் முறையாக புதைவட கேபிள் மூலம் மின் இணைப்பு


திருச்சி மாநகரில் முதல் முறையாக புதைவட கேபிள் மூலம் மின் இணைப்பு
x

திருச்சி மாநகரில் முதல் முறையாக புதைவட கேபிள் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி

சாலையின் நடுவில் மின்கம்பங்கள்

திருச்சி மாநகராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ராஜா காலனி 2-வது தெரு உள்ளது. இங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையின் நடுவில் மின்கம்பங்கள் அமைந்திருந்தன. இதனால் அந்த வீதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதுடன், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்தது. இதன் காரணமாக அந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி, சாலையோரம் வைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்தநிலையில் கடந்த மாதம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மின்வாரிய அதிகாரிகளுடன் அந்த சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதைவட கேபிள்கள் மூலம் அந்த பகுதிக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மின்வாரிய அதிகாரிகள், அதற்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்தனர்.

மின் இணைப்பு

அத்துடன், அதற்கான கேபிள்கள் மற்றும் மின் இணைப்பு வழங்க தேவையான உபகரணங்கள் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாநகரங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு, உயர் மற்றும் தாழ்வழுத்த கேபிள்களை பூமிக்கு அடியில் புதைத்து, அதற்கான பணிகளை தொடங்கினர். இதற்காக ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு மின்கேபிள்கள் பதிக்கப்பட்டு, 15 மின் இணைப்பு பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கியதை தொடர்ந்து சாலையின் நடுவில் இருந்த மின்கம்பங்கள் நேற்று அகற்றப்பட்டன. திருச்சி மாநகரில் முதல் முறையாக புதைவட மின் கேபிள்களை இப்பகுதியில் தான் புதைத்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான செலவுத்தொகை ரூ.58 லட்சத்தை திருச்சி மாநகராட்சி நிதியில் இருந்து செலுத்தப்பட்டு உள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story