மின் கட்டண உயர்வு: செங்கல்பட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்பார் என அறிவிப்பு


மின் கட்டண உயர்வு: செங்கல்பட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்பார் என அறிவிப்பு
x

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 16-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள விடியா திமுக அரசை கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அதிமுக சார்பில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் 16.09.2022 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 16.09.2022 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, ஆகிய மாவட்ட கழகங்களின் சார்பில் செங்கல்பட்டு நகரில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்க உள்ளார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் எனறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story