சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு: குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை


சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு: குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
x

சட்டவிரோதமாக கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

ஈரோடு,

ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கருமுட்டை மூலம் கிடைத்த பணத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை ஆகியோர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். சிறுமியிடம் இருந்து மட்டும் 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரிடம் தனித்தனியாக மருத்துவப் பணிகள் குழு டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் இன்று விசாரணை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் உறுப்பினர்கள் மல்லிகா, துரைராஜ், சரண்யா ஜெயக்குமார், முரளிகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கருமுட்டை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி, சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார், மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் கருமுட்டை விவகாரம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும், இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரம் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.


Next Story