ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இளையோர் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம்
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இளையோர் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் மாணவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு ஆலோசனைகளை பெற்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இளையோர் மேம்பாட்டுக்கான ராஜீவ்காந்தி தேசிய நிறுவனத்தில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் தொடக்க அமர்வில் பேசிய பேராசிரியர் சுப்புநாத் தேவ், இளையோர் மேம்பாட்டுக்கான ராஜீவ்காந்தி தேசிய நிறுவனத்தின் மாணவர்கள் சமூகப்பணி, கணினி அறிவியல், பயன்பாட்டு உளவியல், பொது நிர்வாகம், சமூகவியல், ஆங்கிலம். கணிதம் போன்றவற்றில் பணியாற்ற பெருமளவு திறன் பெற்றிருப்பதாக கூறினார். ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் சென்னையை சேர்ந்த 10-க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்றன.
பல்வேறு துறைகளை சேர்ந்த 204 மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு ஆலோசனைகளை பெற்றனர். முதல் நாள் முகாமில் 35 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முகாம் வருகிற 31-ந்தேதி வரை நீடிக்கும். வேலைவாய்ப்பு அளிக்கும் சில நிறுவனங்கள் இன்று(வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 18-ந்தேதிகளில் இந்த நிறுவனத்தின் வளாகத்தை பார்வையிடுவதோடு, பல்வேறு துறைகளின் மாணவர்களுடன் நேர்காணல் நடத்த உள்ளனர்.