அரசு முத்திரையுடன் பணி நியமன ஆணை - முன்னாள் ராணுவ வீரர் - பெண் போலீஸ் தம்பதி மோசடி..!
இந்தியன் ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் ராணுவ வீரர் - பெண் போலீஸ் தம்பதி ரூ.30 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
மதுரை,
இந்தியன் ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் மற்றும் பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.ஜி அலுவலகத்தில் இளைஞர்கள் புகாரளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கூடலிங்கம் மற்றும் மதுரை ஆயுதப்படை போலீசாராக பணியாற்றி வரும் அவரது மனைவி கார்த்திகை செல்வி ஆகியோர் அவர்களுக்கு தெரிந்த நண்பர்கள் சிலரிடம் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த 2019 மே மாதம், விருதுநகர், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 7 இளைஞர்களிடம் தலா 4 முதல் 6 லட்சம் வரை என மொத்தம் சுமார் 32 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். மேலும் அனைவருக்கும் அரசு முத்திரை உடன் கூடிய பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளனர்.
ஆனால் பயிற்சியோ ஊக்க தொகையோ எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த இளைஞர்கள், விசாரித்த போது அனைத்தும் போலி என்பதும் தாங்கள் ஏமாற்றப்பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து பணத்தை கேட்ட போது மிரட்டியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் மதுரையில் தென்மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.