அழிந்து வரும் கிராமப்புற விளையாட்டுகள்


அழிந்து வரும் கிராமப்புற விளையாட்டுகள்
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் கேம்களில் சிறார்கள் முடங்கி உள்ளனர். எனவே அழிந்து வரும் கிராமப்புற விளையாட்டுகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

ராமநாதபுரம்

'ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா'

- என்று அன்று பாடினார் பாரதியார்.. ஆனால் இன்றோ.. சிறுவர், சிறுமிகள் ஓடியாடி விளையாடுவதை பார்க்க முடிவதில்லை.பெரும்பாலான குழந்தைகள் செல்போன் பிடியில் சிக்கி தவிக்கின்றன. பள்ளி முடிந்து வீடு திரும்பும் பெரும்பாலான சிறுவர்-சிறுமிகள் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதில் மூழ்கி விடுகின்றனர். செல்போனில் யூடியூப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இன்றைய இளைஞர்களும் மூழ்கி விடுகின்றனர். அந்த காலம் போல தெருக்களில் சிறுவர்-சிறுமிகள் ஒன்று கூடி விளையாடுவதில்லை.

பாரம்பரிய விளையாட்டுகள்

அன்றைய கிராமப்புற விளையாட்டுகளை நமது பாரம்பரியமும் கலாசாரமும் அடங்கியுள்ளதாக சொல்லலாம். மேலும் உடல் மற்றும் மனநலத்திற்கும் ஆரோக்கியத்தை தரக்கூடியதாகவும் சங்க இலக்கியத்திலும் விளையாட்டுகள் குறித்து கூறப்பட்டுள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமபுறங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து நொண்டி, கோகோ, கண்ணாமூச்சி, கிச்சு கிச்சு தாம்பாளம், சிறு வீடு கட்டி விளையாடுதல், ஊஞ்சல் என பல விளையாட்டுகளை சேர்ந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள்.

இதை தவிர சிறுவர்கள் முதல் இளைஞர்கள் கோழிகுண்டு, பம்பரம், கபடி, செவன் கல் போன்ற விளையாட்டுகளையும் மிகுந்த ஆர்வமுடன் விளையாடுவார்கள்.

இது போன்ற விளையாட்டுக்கள் அனைத்தும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து கிராமப்புறங்களிலும் நாம் பார்க்கலாம். ஆனால் செல்போன்களின் வருகையால் தற்போது கிராமப்புறங்களில் கூட இது போன்ற விளையாட்டுகளை பார்ப்பது என்பது மிகுந்த அரிதாகிவிட்டது என்றே சொல்லலாம்.

நகர்ப்புறங்களில் முழுமையாக இந்த அனைத்து விளையாட்டுகள் அழிந்தே போய்விட்டன என்று சொல்லலாம்.. ஆனால் இன்னும் ஒரு சில கிராமப்புறங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறுவர்கள் பம்பரம், கோழிகுண்டு, கபடி உள்ளிட்ட ஒரு சில விளையாட்டுகளை தற்போது விளையாடி வருவது மிகுந்த ஒரு ஆச்சரியமான விஷயமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி அருகே சுந்தரமுடையான் கிராமத்தில் சிறுவர்கள் கோழிகுண்டு விளையாடி மகிழ்ந்தனர்.

பாதுகாக்க கோரிக்கை

விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டி வரும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற கிராமப்புற விளையாட்டுகளை விளையாடுவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கும் பட்சத்தில் கிராமப்புற விளையாட்டுகள் பாதுகாக்கப்படும். மாணவர்களின் உடல் நலமும் மனநலமும் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகிறார்கள். எனவே இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விளையாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.


Related Tags :
Next Story