பேச மறுத்ததால் காதலி வீட்டுமுன் தீக்குளித்து என்ஜினீயர் தற்கொலை....!


பேச மறுத்ததால் காதலி வீட்டுமுன் தீக்குளித்து என்ஜினீயர் தற்கொலை....!
x

காதலி பேச மறுத்ததால் அவரது வீட்டுமுன் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள டி.காமராஜர்புரத்தை சேர்ந்தவர் கோவில்பிச்சை (வயது 51). இவருடைய மகன் தேவகுமார்(24). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கடந்த ஒரு ஆண்டாக துபாயில் வேலை பார்த்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அவர் தனது தந்தையிடம் இதுபற்றி தெரிவித்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். கோவில்பிச்சையும் தனது மகனிடம் அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார்.

பேச மறுப்பு

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பெண், தேவகுமாருடன் பேச மறுத்ததாக தெரிகிறது. இதை தேவகுமார் தனது தந்தையிடம் தெரிவித்ததோடு, மன உளைச்சலில் இருப்பதாகவும், ஊருக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனால் கோவில்பிச்சை தன் மகனை ஊருக்கு வருமாறு சொல்லியுள்ளார்.

தீக்குளித்து சாவு

அதன்படி ஊர் திரும்பிய தேவகுமார், தான் காதலித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். அங்கிருந்து திரும்பி வந்த அவர், அந்த பெண் தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டதாக தனது தந்தையிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார்.

மகனுக்கு கோவில்பிச்சை ஆறுதல் கூறிய நிலையில், சம்பவத்தன்று இரவில் தேவகுமார் பெட்ரோல் கேனுடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையறிந்த கோவில்பிச்சை பதறியபடி அங்கு விரைந்து சென்றார். ஆனால் அதற்குள் தேவகுமார் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தேவகுமார் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.


Next Story