தாய் இறந்த சோகத்தில் என்ஜினீயர் தற்கொலை
திருவள்ளூர் அருகே தாய் இறந்த சோகத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் ஜீவானந்தம் தெருவில் வசித்து வந்தவர் உதயகுமார் (வயது 25). என்ஜினீயரான இவருக்கு தஞ்சாவூர் மாவட்டம் மனத்திடல் கிராமம் சொந்த ஊராகும். இவர் திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து மணவாளநகரில் உள்ள வீட்டில் ஊழியர்களுடன் தங்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சொந்த ஊரில் வசித்து வந்த உதயகுமாரின் தாயாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று உடல்நலம் சரியில்லை என்று கூறி வேலைக்கு செல்லாமல் அறையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து பணி முடிந்து வீட்டிற்கு சக ஊழியர்கள் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி உதயகுமார் கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மணவாளநகர் போலீசுக்கு அளித்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.