ஆவடியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி குடும்பத்தினர் அதிக நெருக்கடி கொடுப்பதாக கடிதம்


ஆவடியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி குடும்பத்தினர் அதிக நெருக்கடி கொடுப்பதாக கடிதம்
x

ஆவடியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவி குடும்பத்தினர் அதிக நெருக்கடி கொடுப்பதாக கடிதம் எழுதி வைத்து இருந்தார்.

சென்னை

ஆவடி ஜே.பி. எஸ்டேட் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அவினாஷ் (வயது 33). என்ஜினீயரான இவர் சிறுசேரி பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பவித்ரா தேவி (29). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை.

சிறுசேரி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவினாஷ் மீது பவித்ரா தேவி குடும்பத்தினர் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் அவினாசை அழைத்து விசாரித்தனர். அதன்பிறகு பவித்ரா தேவி, கணவரை விட்டு பிரிந்து அயனாவரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அவினாஷ் ஆவடியில் அவரது வீட்டில் வசித்து வந்தார். மேலும் பூந்தமல்லி ேகார்ட்டில் அவினாஷ், விவாகரத்து வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அயனாவரம் அனைத்து மகளிர் போலீசார், அவினாசை விசாரணைக்கு வரும்படி அழைத்து இருந்தனர். நேற்று முன்தினம் படுக்கை அறைக்கு தூங்க சென்ற அவினாஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார், அவினாஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அவினாஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில் அவர், "எனது மனைவியின் குடும்பத்தினர் அதிக நெருக்கடி கொடுக்கிறார்கள். விவாகரத்துக்கு நான் மனு செய்து உள்ளேன். ஆனால் அடிக்கடி போலீசில் புகார் கொடுத்து என்னை விசாரணைக்கு வருமாறு அழைப்பதால் எனக்கு அதிக மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனது சாவுக்கு என் மனைவி, மாமனார், மாமியார், மனைவியின் தங்கை மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஆகியோர்தான் காரணம்" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story