தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்....!


தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்....!
x

தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது, முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நடக்கிறது.

சென்னை,

2023-24-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 430 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 காலி இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு குறித்த புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி, கலந்தாய்வு இன்று தொடங்க இருக்கிறது. முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.

இதில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு இன்று தொடங்கி நடக்க இருக்கிறது.

இவர்களுக்கு விளையாட்டு பிரிவில் 38 இடங்களும், முன்னாள் படைவீரர்கள் பிரிவில் 11 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 579 இடங்களும் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

அவர்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவும், அன்று இரவே தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, நாளை பிற்பகல் 3 மணிக்குள் அதனை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு உறுதி செய்பவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவில் வரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் 27-ந்தேதி வரை (வியாழக்கிழமை) வரை நடைபெற உள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதும், பொது கலந்தாய்வும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடக்க உள்ளது. இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட இருக்கிறது.

அந்தந்த பிரிவில் வரும் மாணவ-மாணவிகள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கு பெற்று, இடங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் அறிவுறுத்தி இருக்கிறது.


Next Story