ஆம்னி பஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
சின்னசேலம் அருகே கல்லூரிக்கு சென்ற முதல் நாளில் ஆம்னி பஸ்மோதி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னசேலம்
மாணவர்
கள்ளக்குறிச்சியை அடுத்த சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் சண்முகபிரியன்(வயது 18). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்றிருந்தார். இந்த நிலையில் நேற்று வகுப்புகள் தொடங்கிய நிலையில் சண்முகபிரியனை ரெயில் மூலம் கல்லூரிக்கு அனுப்பி வைப்பதற்காக இளங்கோவன் கள்ளக்குறிச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சண்முகபிரியனை அழைத்துக்கொண்டு சின்ன சேலம் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஆம்னி பஸ் மோதியது
உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பங்காரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் வந்த ஆம்னி பஸ் இளங்கோவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த சண்முகப்பிரியனை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து அவரது தாய் ரேவதி(37) கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ் டிரைவரை தேடி வருகிறார்.
கல்லூரிக்கு சென்ற முதல் நாளிலேயே ஆம்னி பஸ்மோதி மாணவர் பலியான சம்பவம் சடையம்பட்டு கிராமமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.