"பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது" - அமைச்சர் பொன்முடி தகவல்
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இந்தாண்டு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில், நடந்துமுடிந்து இரண்டு கலந்தாய்வுகள் மூலம் மொத்தமுள்ள 2360 இடங்களில் இதுவரை 2355 பேர் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடம் என்பது இருக்காது.
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான மூன்றாவது கலந்தாய்வு வரும் 13-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் 49 ஆயிரத்து 43 பேர் கலந்துகொள்வார்கள். இறுதியாக நான்காவது கலந்தாய்வு நடைபெறும். அதில், 61 ஆயிரத்து 657 பேர் கலந்துகொள்வார்கள். இன்னும்கூட 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் நடக்கவேண்டியுள்ளது.
அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான 4000 இடங்களை நிரப்பப் உள்ளோம். மொத்த காலிப் பணியிடங்கள் 6906 உள்ளன. இதில் 4000 இடங்களை நிரப்ப உள்ளோம். இந்தப் பணியிடங்களுக்கும் டிஆர்பி மூலமாக எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.
கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து நேர்முகத் தேர்வில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். கவுரவ விரிவுரையாளர்கள் எழுத்துத் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.