அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - மாநில மனித உரிமை ஆணையம்


அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - மாநில மனித உரிமை ஆணையம்
x

அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள செம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்பவர் 2019-ம் ஆண்டு பிரசவத்திற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பின்போது, அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முறையாக தையல் போடாததால் சில உடல் உபாதைகளை அவர் சந்தித்தார்.

இதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில், பிரசவத்தின் போது மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனையை மனுதாரர் சந்தித்துள்ளார். உரிய நேரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காது தான் இதற்கு காரணம், இது மத்திய அரசின் மருத்துவ வழிகாட்டுதல் விதிகளுக்கு முரணானது என்று கூறி அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் மருத்துவம் மற்றும் ஊடக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அவ்வப்போது தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் திடீர் சோதனைகள் நடத்தி 24 மணிநேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவ பணிகள் இயக்குனருக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story