40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய பா.ம.க. பெண் கவுன்சிலர்


40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய பா.ம.க. பெண் கவுன்சிலர்
x
தினத்தந்தி 12 July 2023 7:32 PM GMT (Updated: 13 July 2023 7:44 AM GMT)

வேலூர் மாநகராட்சி 53-வது வார்டில் 40 கண்காணிப்பு கேமராக்களை பா.ம.க. பெண் கவுன்சிலர் பாபிகதிரவன் சொந்தசெலவில் பொருத்தினார். அதன் செயல்பாடுகளை காவல்துறையிடம் ஒப்படைக்க உள்ளார்.

வேலூர்

கண்காணிப்பு கேமராக்கள்

வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கும் கண்காணிப்பு கேமராக்கள் என்பது முக்கியமானதாக அமைந்துள்ளது. எனவே மாவட்ட காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, தனியார் நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மாநகராட்சி 53-வது வார்டு பா.ம.க. கவுன்சிலர் பாபிகதிரவன் ஒத்துழைக்கும் வகையில் அவரது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனது சொந்த செலவில் 40 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளார்.

ஆய்வு

இதன் மூலம் ஓட்டேரி, பாலமதி செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவை உள்ள இடங்களில் சொந்தசெலவில் சென்சார் வசதி கொண்ட சோலார் மின்விளக்குள் கொண்ட 20 கம்பங்களும் வைத்துள்ளார்.

இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை பாகாயம் போலீஸ் நிலைய பொறுப்பாளர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் (பயிற்சி) மற்றும் கவுன்சிலர் பாபிகதிரவன் ஆகியோர் ஓட்டேரி ஏரிப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதனிடையே அங்கு நிர்வாக பணியின் நிமித்தமாக வந்த கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் அவர்கள் கலந்துரையாடினர். அப்போது கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து கவுன்சிலர் பாபிகதிரவன், கலெக்டரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் கூறுகையில், கவுன்சிலர் பாபிகதிரவன் முயற்சியால் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களை காவல்துறை வசம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் இந்த கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிக்க உள்ளனர். இதேபோன்று பிற வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றார்.


Next Story