ஈரோடு இடைத்தேர்தல்: பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியை சோ்ந்த திருமகன் ஈவெரா இருந்தார். அவர் கடந்த 4-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
தேர்தல் பணியாற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொண்ட பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதோடு இல்லாமல் பூத் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த பணிகளை ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) மாலை ஈரோட்டுக்கு வருகிறார். வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அவர் பூத் வாரியாக ஆய்வு செய்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் தேர்தல் பணிக்குழுவினர், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் உள்ளூர் பொறுப்பாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்தனர். அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அதில் பூத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள், கடந்த தேர்தலில் அங்கு அ.தி.மு.க.வுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தது. புதிதாக எத்தனை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அந்த பூத்தில் உள்ள மக்கள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிகிறார். இதே போல் 238 பூத் கமிட்டியினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.