ஈரோடு ஆசிரியை கொலை வழக்கு: தடயங்கள் கிடைக்காமல் தவிக்கும் தனிப்படை போலீசார்- செல்போன் அழைப்புகளை வைத்து துப்பு துலக்குகிறார்கள்


ஈரோடு அரசு பள்ளி ஆசிரியை படுகொலை வழக்கில் தடயங்கள் கிடைக்காமல் தவிக்கும் தனிப்படை போலீசார், செல்போன் அழைப்புகளை வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

ஈரோடு

ஈரோடு அரசு பள்ளி ஆசிரியை படுகொலை வழக்கில் தடயங்கள் கிடைக்காமல் தவிக்கும் தனிப்படை போலீசார், செல்போன் அழைப்புகளை வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

ஆசிரியை

ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியில் வசித்து வருபவர் மனோகரன் (வயது 62). இவருடைய மனைவி புவனேஸ்வரி (54). அரசு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களின் வீட்டுக்கு மேல் வீட்டில் வாலிபர் ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அவரது பெயர் பல்ராம் (30). இவர் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் மனோகரன் கடந்த 20-ந் தேதி காலை நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது புவனேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

கொலை

மேலும் அவர் அணிந்து இருந்த 6½ பவுன் தங்கச்சங்கிலியும் மாயமாகி இருந்தது. இதனால் நகைக்காக யாராவது அவரை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால், வீட்டில் பீரோவில் இருந்த பிற நகைகள் மற்றும் பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. எனவே ஆசிரியை புவனேஸ்வரி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதே நேரம் போலீசாரின் சந்தேக பார்வை கணவர் மனோகரன் மீதும், அவர்களின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர் பல்ராம் மீதும் சென்றது. அவர்களை தனித்தனியாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதிலும் எந்த தெளிவும் கிடைக்கவில்லை.

தனிப்படை

இதனால் இந்த வழக்கு சிக்கலானதாக மாறியது. இதுதொடர்பாக துப்பு துலக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.ஜவகர் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

மனோகரன் நடை பயிற்சிக்கு சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் யாராவது வீட்டுக்குள் வந்தார்களா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கொலை நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் உடனடியாக யாருடைய நடமாட்டத்தையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கத்தி எங்கே?

மேலும், கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கத்தியும் கிடைக்கவில்லை. எனவே அதை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் உடனடியாக எந்த தடயமும் கிடைக்காமல் தனிப்படை போலீசார் தவிக்கின்றனர்.

இந்தநிலையில் கொலை நடந்த நாளில் குறிப்பிட்ட பகுதியில் பேசப்பட்ட அழைப்புகள், செல்போன் கோபுரங்களின் இணைப்பு பெற்ற செல்போன் எண்கள் ஆகியவற்றை போலீசார் சேகரித்து துப்பு துலக்கி வருகின்றனர்.

மர்ம முடிச்சு

கொலை நடந்தபோது சத்தம் போடாமல் இருக்க புவனேஸ்வரியின் முகத்தை கொலையாளி தலையணையால் அழுத்திப்பிடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் பிரேத பரிசோதனையில் எழுப்பப்பட்டு உள்ளது. எனவே இந்த சம்பவத்தில் ஒரு நபர் மட்டும் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகிறார்கள்.

ஆசிரியை புவனேஸ்வரி ஆசிரிய சங்க நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு உடையவர். அனைவரிடமும் அன்பாக பழகுபவர் என்று ஆசிரியர் சங்கத்தினர் கூறியுள்ளனர். இந்த சூழலில் அவரை படுகொலை செய்யக்கூடிய அளவுக்கு கொலை வெறியுடன் இருந்தவர்கள் யார்? ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்? என்ற மர்ம முடிச்சுகள் அவிழாமலேயே இருக்கிறது.

செல்போன் அழைப்பு

இதையடுத்து ஏற்கனவே விசாரித்த நபர்களிடம் தனிப்படையினர் தொடர்ந்து விசாரித்து வந்தாலும், சம்பவம் நடந்த நேரத்தையொட்டி அந்த பகுதியில் நடமாடிய வேற்று நபர்கள், வ.உ.சி. வீதிக்கு வரும் பாதையில் சென்று வந்த நபர்களின் அடையாளங்களை திரட்டும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக அந்த பகுதியின் இணைப்பு பகுதிகள் உள்ள அனைத்து இடங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. செல்போன் இணைப்பு அழைப்புகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றன.

இதுபற்றி போலீசார் கூறும்போது, 'தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளனர். விசாரணை ஒரு அங்குலம் கூட நகராமல் அப்படியே உள்ளது. எனினும் விரைவில் கொலையாளி சிக்குவார்' என்றனர்.


Related Tags :
Next Story