தி.மு.க.வின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைக்கு குரல் எழுப்புவோம்
கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க.வின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைக்கு குரல் எழுப்புவோம் என்று கூறினார்.
கோவை
கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க.வின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைக்கு குரல் எழுப்புவோம் என்று கூறினார்.
இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று முன்தினம் வடவள்ளியில் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு 40 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. ஐகோர்ட்டு உத்தரவிட்டும், அரசு செயல்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள், நிலம் இழந்தோர் கூட்டமைப்பினர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டணியில் இருந்தாலும்...
ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணமோ, இழப்பீடு தொகையோ தரவில்லை. ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாங்கள் தி.மு.க.வின் கூட்டணி கட்சியாக இருந்தாலும், மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் எழுப்புவோம். எனவே, தமிழக அரசு இந்த பிரச்சினையை விரைவில் முடித்து நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். நிதி இல்லை என்றால் பல்கலைக்கழகத்தில் உள்ள 900 ஏக்கரில் 400 ஏக்கரை மீண்டும் விவசாயிகளுக்கே வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.