இயேசுபிரானின் உயரிய போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் - ஓபிஎஸ் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து...!
கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,
தேவ குமாரனாம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதியும், மகிழ்ச்சியும் நிலவிட வேண்டும், பகைவரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்த இயேசுபிரான், சிலுவையில் அறையப்பட்டு பின்பு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது புனித நூலான பைபிளின் வாசகங்களை வாக்கிலும், மனதிலும் நிலைநிறுத்தியவர்களாய் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்து கர்த்தராகிய இயேசு பிரானை வழிபடுவார்கள்.
இந்த நன்னாளில், மனிதநேயம் கொண்டவர்களாய் அன்புடனும், சகோதரத்துவ உணர்வுடனும் பிறருக்கு துன்பங்கள் இழைத்திடாமல் வாழ்ந்து, எப்போதும் பிறரது துயரங்களைக் களைந்திட முயற்சி செய்திட வேண்டும் என்ற இயேசுபிரானின் உயரிய போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.