'நடப்பவை அனைத்தும் நன்மைக்கே' - எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
'நடப்பவை அனைத்தும் நன்மைக்கே' என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உயிர்களைக் காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் எனது உளங்கனிந்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய திருநாளில் குழந்தைகளை கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து, கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து வரிசையாக பதிய வைத்தும், காண்பவர்களின் கண்களுக்கு அந்தக் குழந்தை கிருஷ்ணனே, கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு இல்லத்திற்கும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் கோலமிட்டு, அலங்காரம் செய்து, அப்பம், சீடை, பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய் மற்றும் பழ வகைகளைப் படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு மகிழ்ச்சியடைவர்.
நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று கீதையில் கண்ணன் உரைத்த "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்" என்ற கண்ணனின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.