ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற இருப்பதுமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக இருக்கும்;ஈரோட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற இருப்பதுமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக இருக்கும்;ஈரோட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
x

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற இருப்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று ஈரோட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினாா்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஈரோடு அன்னை சத்யா நகரில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது கூறியதாவது:-

இங்குள்ள பகுதி மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த கட்டிடங்கள் பழுதானதால் புதிய கட்டிடத்தை கடந்த அரசு கட்டி கொடுத்தது. ஆனால் ஏற்கனவே உள்ள வீடுகளை காட்டிலும், வசதியாக தான் புதிய வீடுகளை கட்டி கொடுத்து இருக்க வேண்டும். அளவில் சிறியதாக வீடுகளை கட்டி கொடுத்திருப்பதை ஏற்க முடியாது. இனி கட்டிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், உங்களுக்கு வேண்டிய வசதிகளை உறுதியாக செய்து கொடுப்போம். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரைபோல நானும் மாற வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். இவர்கள் 2 பேரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர் 50 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து இந்த பதவிக்கு வந்தவர். நள்ளிரவு 12 மணியானாலும் சரி ஏதாவது ஒரு தகவல் என்றால், உடனே எங்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்த அறிவுறுத்துவார். உங்களுக்காக மீண்டும் பணியாற்ற வாய்ப்பு கேட்டு வந்து உள்ளோம். நீங்கள் கை சின்னத்துக்கு வாக்குகளை அளித்து வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

நாங்கள் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறோம். எங்களை போலவே எதிர் அணியில் இருப்பவர்களும் வந்து ஓட்டு கேட்பார்கள். ஆனால் நாங்கள் யாரையும் குறை சொல்லி ஓட்டு கேட்க வரவில்லை. திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பல்வேறு திட்டங்களுக்கு கையெழுத்து வாங்கி உள்ளார். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்குள் எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்தார். அவரது பணியை தொடருவதற்காக அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடைத்தேர்தலில் நிற்கிறார். தந்தை இறந்து மகன் தேர்தலில் போட்டியிடுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் மகன் இறந்து தந்தை போட்டியிடும் வருத்தமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. வருகிற 27-ந் தேதி நடக்கும் தேர்தலில் உங்களுடைய வாக்குகளை செலுத்த வேண்டும். வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வருகிறது. எனவே வருகிற 2-ந் தேதி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற செய்தியே முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் பரிசாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரசாரத்தில் தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் பிரகாஷ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி சஞ்சய் சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story