தொழிற்சாலை ஊழியர்களை தாக்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 25 பேர் மீது வழக்கு


தொழிற்சாலை ஊழியர்களை தாக்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 25 பேர் மீது வழக்கு
x

தொழிற்சாலை ஊழியர்களை தாக்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு நிறுவனத்திற்கு கை மாறியது. புதிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் அந்த தொழிற்சாலை அமைய நிலம் கொடுத்த தொழிலாளர்கள் 178 பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 4 வருட காலமாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் அவர்களுக்கு இதுநாள் வரை மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக அந்த தனியார் தொழிற்சாலை முன்பு வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு பணிபுரியும் 2 ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணன், ஏ.ஐ.டி.யூ.சி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட நிர்வாகி ரவி, மாவட்ட துணை செயலாளர் சரவணன், திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் ஆறுமுகம் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் என 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story