வீடு புகுந்து முன்னாள் ராணுவ வீரர் மனைவியை தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு


வீடு புகுந்து முன்னாள் ராணுவ வீரர் மனைவியை தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு
x

வீடு புகுந்து முன்னாள் ராணுவ வீரர் மனைவியை தாக்கி 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

திருச்சி

5 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிராப்பட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பலராமன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சரோஜா(வயது 68). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் கதவை வேகமாக தட்டியுள்ளனர். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த சரோஜா எழுந்து வந்து கதவை திறந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சரோஜாவை வீட்டிற்குள் தள்ளிவிட்டு உள்ளே புகுந்தனர்.

பின்னர் சரோஜாவை சரமாரியாக உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சரோஜா மயக்கம் அடைந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

போலீசார் விசாரணை

பின்னர் காலையில் அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் படுகாயமடைந்து கிடந்த சரோஜாவை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து போலீசார் எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் திடீரென்று வாகன சோதனை நடத்தினார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story