கிருஷ்ணகிரி மாவட்டத்தில்87 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு தொடக்கம்கலெக்டர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. இதனை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிளஸ்-2 தேர்வு
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. வருகிற ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வில் கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தின் 118 அரசு, தனியார் பள்ளிகள், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 68 அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 23 ஆயிரத்து 948 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87 தேர்வு மையங்களில் நேற்று நடந்த தேர்வில் 20 ஆயிரத்து 875 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 3,073 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை.
ஓசூர் அடுத்த பாகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ்-2 தேர்வை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
145 பறக்கும் படைகள்
மேலும் மாவட்டம் முழுவதும் தேர்வை கண்காணிக்க 145 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் ஆசிரியர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் மற்றும் நிர்வாகிகள் மாணவிகளுக்கு இனிப்பு, பூக்கள் வழங்கியும், ஆசிரியைகள் தேர்வு எழுத வந்த மாணவிகளை ஆரத்தி எடுத்தும் வாழ்த்தி அனுப்பினர்.