தர்மபுரி மாவட்டத்தில், 8 மையங்களில்`நீட்' தேர்வை 5,331 மாணவ, மாணவிகள் எழுதினர்


தர்மபுரி மாவட்டத்தில், 8 மையங்களில்`நீட் தேர்வை 5,331 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 7 May 2023 7:00 PM GMT (Updated: 7 May 2023 7:01 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் 8 மையங்களில் 5,331 மாணவ, மாணவிகள் `நீட்' தேர்வை எழுதினர். 106 பேர் வரவில்லை.

நீட் தேர்வு

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் 2023- 2024-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவு தேர்வான 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று நீட் தேர்வு எழுதினர். இதேபோன்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.

தர்மபுரி மாவட்டத்தில் 8 மையங்களில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தர்மபுரி செட்டிக்கரை கேந்திரிய வித்யாலயா பள்ளி, அதியமான்கோட்டை கலெக்டர் பங்களா அருகே உள்ள செந்தில் பப்ளிக் பள்ளி, தர்மபுரி நகரில் டான் சிக்ஷாலயா பப்ளிக் பள்ளி, ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சோகத்தூர் தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி, கே.நடுஅள்ளி கமலம் இண்டர்நேஷனல் பள்ளி, நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரி ஆகிய பள்ளிகளில் வளர்த்த பாதுகாப்புடன் இந்த நீட் தேர்வு நடைபெற்றது.

ஆர்வத்துடன் எழுதினர்

மொத்தம் 5437 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வில் 5331 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 106 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த நீட் தேர்வையொட்டி அனைத்து மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனைத்து மையங்களிலும் காலை 10 மணி முதல் மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் வர தொடங்கினர். மையத்தின் நுழைவுவாயில் பகுதியிலேயே பெற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மாணவ, மாணவிகள் மட்டும் கெடுபிடியான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு வரும் வரை அவர்களது பெற்றோர்கள் மையத்தின் வெளியிலேயே காத்திருந்தனர். தேர்வு எழுதி விட்டு வந்த தங்களது மகன், மகள்களை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத மொத்தம் 4,946 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து நேற்று காலை தேர்வு எழுத அந்தந்த மையங்களில் காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் குவிந்தனர்.இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் மொத்தம் 4,820 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். 126 பேர் தேர்வு எழுதவில்லை.


Next Story