மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளதால் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மழைநீர் தேங்கும் பகுதிகளாக 21 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அரியலூர்

வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, நேற்று மாலை நிலவரப்படி அந்த அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், கரூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் முக்கொம்புக்கு நேற்று மாலை நிலவரப்படி 1½ லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் குலமாணிக்கம் கொள்ளிடக்கரை, திருமழப்பாடி கொள்ளிடக்கரை மற்றும் திருமானூர் கொள்ளிடப்பாலம் ஆகிய பகுதிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கொள்ளிடக்கரைகளில் போதுமான அளவு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரை நியமிக்கவும், வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கரைகளை கண்காணித்திடவும் அறிவுறுத்தினார்.

இதனைதொடர்ந்து புதுக்கோட்டை ஊராட்சி, யூ.சி. நடுநிலைப்பள்ளி மாற்று இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? எனவும், உணவு தயாரிக்கும் இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் அறிவுரை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அறிவுரை வழங்கினார். அப்போது தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கும் பொழுது அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

அரியலூர் மாவட்டத்தில் ஆடி பெருக்கிற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொள்ளிடக்கரைகளில் கடந்த 3 நாட்களாக தேவையான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள கண்காணிப்புக்குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21 இடங்கள்

மழைநீர் தேங்கும் பகுதிகளாக 21 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 21 இடங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட கிராமங்களில் 400 முதல் நிலை நபர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் மழை நீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தகவல் அறிந்து உடனடியாக அங்கு சென்று பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

4 குழுக்கள் அமைப்பு

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆறு செல்லும் 3 தாலுகாக்களில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறைகளின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் வேளாண்மை துறையினரும் உள்ளனர். எனவே மேற்கண்ட 3 தாலுகாக்களிலும் அனைத்துத்துறை அலுவலர்களை கொண்ட குழுக்கள் மீட்பு பணிகளுக்கு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலக தொலைபேசி எண் 04329-228709 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். மழை பாதிப்புகள் மற்றும் உதவிகள் குறித்து பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.

மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார பகுதிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர் கலைவாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கேட்டு அறிந்தார். கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஆட்டோ மூலம் ஒலிபெருக்கி வைத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடும் பணியை ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, கோடாலி கருப்பூர் ஏழு கண் மதகு பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ள நீர் வடிகால் வாய்க்காலுக்குள் புகாதவாறு மதகுகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் அன்னங்காரம்பேட்டை, கோடாலிகருப்பூர், வடவார்தலைப்பு, முட்டுவாஞ்சேரி மருதையாற்று முகப்பு, அணைக்குடி ஆகிய பகுதிகளில் கொள்ளிட கரையோர பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைக்கேற்ப முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்ய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நெல்கொள்முதல் நிலையங்கள்

தற்போது அரியலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேவையான தார்ப்பாய்கள் போதுமான அளவு உள்ளன. இதேபோன்று அங்கு மழைநீர் தேங்கும் பட்சத்தில் உடனுக்குடன் பாதுகாப்பாக மழை நீரை வெளியேற்றும் வகையிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இ-அடங்கல்

மழைநீர் வயல்களில் தேங்கும் பொழுது பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இதன் காரணமாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இ-அடங்கலில் சரியான தகவல்களை பதிவேற்றம் செய்யுமாறு கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பிற்கு தேவையான சான்றிதழ்களை சரியாக வழங்கும் வகையில் அடங்கல்களை முறையாக வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story