நாமக்கல்: குழந்தை மீது 2 முறை ஏறி இறங்கிய கார் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி...!
ராசிபுரம் அருகே 2 வயது குழந்தை மீது கார் மோதியதோடு, 2 முறை ஏறி இறங்கியது.
ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் நடுத்தெருவை சேர்ந்தவர் கண்ணன். சலவைத் தொழிலாளி. இவரது 2 வயது மகன் தருண் இன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த காரை நோக்கி குழந்தை தருண் ஓடி உள்ளார். அதை கவனிக்காத காரின் டிரைவர், காரை திருப்புவதற்காக பின்நோக்கி இயக்கியுள்ளார். அப்போது காரின் பின்புறத்தில் ஓடி வந்த குழந்தை தருண் மீது கார் மோதியதோடு, கீழே விழுந்த தருண் மீது ஏறி இறங்கியது.
பின்னர் காரை டிரைவர் முன்னோக்கி இயக்கியபோது, மீண்டும் 2-வது முறையாக காரின் பின்புற சக்கரங்கள் குழந்தை தருண் மீது ஏறி இறங்கியது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டவே, காரை டிரைவர் நிறுத்தினார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு குழந்தை தருண் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
குழந்தையின் மீது கார் ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது சம்பவம் தொடர்பாக ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.