தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம்
ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம் மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல் ரஹ்மானி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் இப்ராஹிம் சாபிர், செயலாளர் தினாஜ்கான், பொருளாளர் கரீம் ஹக் சாஹிப் முன்னிலை வகித்தனர். கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தவ்ஹீதும் தர்பியத்தும் என்ற செயல்திட்டத்தை அடுத்த 4 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மணிப்பூர் கலவரத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள குக்கி இனத்தினருக்கு எதிராக சமூக விரோதிகளால் வன்முறை தூண்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒடிசா ெரயில் விபத்து தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தி பணியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு மீண்டும் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 3.5 சதவீத இடஒதுக்கீடு பல துறைகளில் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாசார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நீண்ட காலமாக சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட துணைதலைவர் யாசர் அரபாத், துணைசெயலாளர்கள் ரஜபுதீன், உஸ்மான், மீரான், கீழை சித்தீக் உள்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் தினாஜ்கான் நன்றி கூறினார்.