விவசாயிகளை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை வேடிக்கை பார்க்க கூடாது - ராமதாஸ்
விவசாயிகளை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. விவசாயிகளை பொறுத்தவரையில் ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிரை சுமார் ரூ.32,500-க்கு காப்பீடு செய்கின்றனர். அதற்காக அரசும், விவசாயிகளும் சேர்ந்து 10 சதவீதம் தொகையை பிரீமியமாக செலுத்துகின்றனர்.
முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களின் சர்வே எண் அடிப்படையில் ரூ.35, ரூ.50, ரூ.66, ரூ.88 என்ற அளவில் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகளுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது அநீதியானது.
விவசாயிகளை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. காப்பீட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, பருவம் தவறிய மழையால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு எவ்வளவோ, அதை இழப்பீடாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.